உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.20 லட்சம் செலவில் வலைத்தளம் மற்றும் செயலி டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையின் சென்னை கோட்டம் சார்பில் சென்னை சேத்துப்பட்டு யூனியன் கிறிஸ்தவ பள்ளியில் நேற்று உலக உணவு பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய உணவு கண்காட்சி, நடமாடும் உணவு ஆய்வகத்தை அவர் பார்வையிட்டு, உணவு பாதுகாப்பு தின உறுதிமொழியும் எடுத்து கொண்டார்

இதையடுத்து டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசும்போது, தேவைக்கு அதிகமாக உணவு இருக்கும்பட்சத்தில் வீணாக்காமல் அதனை வாகனங்களில் சென்று பெற்று தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக சென்னையில் 4 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதனை அனைத்து மாநகராட்சிகளிலும் தலா ஒன்று வீதம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, புகார் மற்றும் குறைகளின் மீது நடவடிக்கை எடுக்க ரூ.20 லட்சம் செலவில் பிரத்தியேகமான வலைத்தளம் (வெப்சைட்) மற்றும் செயலி (அப்ளிகேசன்) விரைவில் தொடங்கப்படும் என்றார்

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், உணவு பாதுகாப்பு துறை கூடுதல் கமிஷனர் டாக்டர் வனஜா, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன், யூனியன் கிறிஸ்தவ பள்ளி செயலாளர் வினோத் சைமன், சென்னை ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்