மத்திய அரசு, ஏகபோகமாக செயல்படும் உள்நாட்டு பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் சலுகைகளை வாரி வழங்கி சிறு, குறு தொழில்களை மட்டும் ஏன் அழிக்கின்றனர்

தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கம் (டான்பா), பிவிசி பிளாஸ்டிக் மூலப்பொருட்களுக்கான இறக்குமதி வரியை 7% சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக மத்திய பட்ஜெட்டில் உயர்த்தியிருப்பதை கடுமையாக எதிர்க்கிறது. மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப சிறு, குறு நிறுவனங்கள் மற்றவர்களுடன் போட்டியிட அவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த சலுகைகளையும் எதிர்ப்பார்க்கக் கூடாது என சிறு, குறு நிறுவனங்களுக்கு அறிவுரை சொல்லும் மத்திய அரசு, ஏகபோகமாக, செயல்படும் உள்நாட்டு பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் சலுகைகளை வாரி வழங்கி சிறு, குறு தொழில்களை மட்டும் ஏன் அழிக்கின்றனர்.

பெரிய நிறுவனங்களுக்கு அனுசரணையாக அவர்கள் விற்பனை பாதிக்காமல் இருக்க, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பொருள் குவிப்பு வரி போடுவதும், உள்நாட்டில் தட்டுப்பாடு இருந்தாலும் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல், பெரிய நிறுவனங்கள், அவர்கள் தயாரிக்கும் மூலப்பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதும், இவைகளுக்கு எல்லாம் மேலாக, உள்நாட்டு தயாரிப்பாளர்கள் ஆன சிறு, குறு பிளாஸ்டிக் தொழிலின் இரத்தத்தை மேலும் உறிஞ்ச இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்துவதும் சிறு, குறு தொழில்களை அழிக்கும் செயலாகத்தான் எங்கள் சங்கம் கருதுகிறது.

ஏற்கனவே உள்நாட்டு பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் தயாரிப்பவர்கள் ஒரு குழுவாக இருந்து கொண்டு, கள்ள சந்தையை மறைமுகமாக இந்தியாவில் உருவாக்கி சிறு, குறு தொழில்களை சுரண்டிக் கொண்டிருக்கின்றனர். இதைப்போன்ற சூழ்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் மூலப்பொருட்களுக்கு, இறக்குமதி வரியை மேலும் உயர்த்துவது என்பது ஏற்கனவே நலிந்து கொண்டிருக்கும் சிறு, குறு பிளாஸ்டிக் நிறுவனங்களை முற்றிலுமாக அழித்தொழிக்கும் செயலாகத்தான் எங்கள் சங்கம் கருதுகிறது.

ஏற்கனவே, பிளாஸ்டிக் மூலப்பொருட்களுக்கு இப்பொழுது உள்ள 7% சதவீதம் இறக்குமதி வரியை 5 சதவீதமாக குறைக்க சொல்லி சிறு, குறு பிளாஸ்டிக் அமைப்புகள் மத்திய அரசுடன் போராடிக்கொண்டு இருக்கும் சூழ்நிலையில், தற்போது பிவிசி மூலப்பொருளுக்கு உள்ள 7%% வரியை , 10% ஆக உயர்த்தி இருப்பது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதாகத் தான், எங்கள் சங்கம் கருதுகிறது. ஆகவே மத்திய அரசு உடனடியாக பிளாஸ்டிக் மூலப்பொருளான பிவிசி-க்கு உயர்த்தப்பட்ட இறக்குமதி வரியை, மீண்டும் பழைய நிலைக்கே குறைக்க வேண்டும் என்று டான்பா கேட்டுக்கொள்கிறது.