பாடப்புத்தகங்களில் சினிமா நடிகர்கள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

இந்தக் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ள பாடப் புத்தகங்களில் சினிமா நடிகர்களை சிலாகித்து அவர்களின் வரலாற்றை எழுதி அதை மாணவர்களுக்கு பாடமாக வைத்துள்ளதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டிக்கிறது.

சிறுவயதில் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி நல்ல நிலையை அடைந்தவர்கள் என்ற பட்டியலில் சினிமா நடிகர்களை பாடபுத்தகத்தில் சேர்த்து வெளியிட்டிருப்பது.

மாணவர்களின் மனதில் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்று அறியாதவர்களா பள்ளிக்கல்வித்துறையில் இருக்கின்றார்கள் என்று கேள்வி எழுப்பும் வகையில் இந்த நிகழ்வு இருக்கின்றது.

உழைத்து முன்னேறியவர்களின் பட்டியலில் நடிகர் ரஜினிகாந்தை மாணவர்களுக்கு பாடமாகக் காட்டினால் பள்ளி மாணவன் தன்னுடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ரஜினிகாந்தை முன்னுதாரனமாக வைத்துக் களமிறங்கினால் என்னவாகும்? படிப்பெல்லாம் நமக்குத் தேவையில்லை எப்படியாவது சினிமாவில் சேர்ந்து ரஜினிகாந்தைப் போல முன்னேறிவிட வேண்டும் என்ற எண்ணத்தைத்தான் பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்கு பாடமாக்கியுள்ளது.

சினிமாவில் மது போதையில் தள்ளாடி, சிகிரெட்டை ஸ்டைலாக தூக்கிப் போட்டு பற்றவைக்கும் ரஜினிகாந்த் போல மாற வேண்டும் என எண்ணத் துவங்கினால் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும்?

உழைத்து முன்னேறுவதற்கு சினிமா ஒன்றுதான் இருக்கின்றதா? அறிவியல், விஞ்ஞானம், பொருளாதாரம், வர்த்தகம் என எத்தனை துறைகளில் கஷ்டப்பட்டு முன்னேறியவர்கள் பட்டியல் நீண்டிருக்கும் நிலையில்

ஆபாசங்களை ஊக்குவிக்கும் சினிமா நடிகரை மாணவர்களுக்கு உதாரணமாகக் பாட புத்தகத்தில் காட்டுவது பள்ளி மாணவர்களின் பிஞ்சு மனதில் நஞ்சை விதைப்பதற்கு சமமாகும்.

கொலையை, கொள்ளையை, வழிப்பறியை, கற்பழிப்பை, தூண்டும் மாய உலகம் சினிமாவை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில்
சினிமா நடிகர்களை பாடப்புத்தகத்தில் பாடமாக ஆக்கி மாணவர்களின் வாழ்க்கையை திசை மாற்றும் இந்த செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டிக்கின்றது.

இதை உடனடியாக பாடபுத்தகத்தில் இருந்து நீக்க பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்

இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்